வேட்டை – [2012]

லிங்குசாமியின் இயக்கிய படம் என்றாலே இப்போதெல்லாம் பதற்றத்துடன் தான் தியேட்டர் பக்கம் செல்கிறேன். ‘பீமா’, ‘பையா’ போன்ற படங்களை பார்த்ததன் விளைவது. ஆனால் வேட்டையை பொருத்த வரை படத்தின் டீசர் வெளியான போதே முடிவு செய்துவிட்டேன்… படத்தை பார்க்க வேண்டுமென. ஒரே காரணம் மாதவன் சொல்லும் வசனம் ‘எனக்கே ஷட்டரா?’. ‘ரன்’ படத்தில் மாதவன் ஷட்டரை மூடிவிட்டு கொளுத்தும் சண்டைக்காட்சி இன்றும் ரசிக்கக்கூடிய ஒன்று.

படத்தின் கதை… பயந்த அண்ணன் குருமூர்த்தி, தைரியமான தம்பி திருமூர்த்தி எப்படி தூத்துக்குடி ரவுடிகளை வேட்டையாடுகிறார்கள் என்பதே. அப்பா இறக்க அவருடைய போலீஸ் வேலையை ஏற்குமாறு குருவிடம் திரு சொல்ல பயந்தபடியே ஏற்கிறார். குரு செய்ய வேண்டிய போலீஸ் வேலையை மறைமுகமாக கச்சிதமாய் செய்ய பாராட்டு குவிகிறது குருவுக்கு. பின் ரவுடிகள் இதை கண்டுபிடிக்க… அவர்களிடம் அடிவாங்கி, தைரியசாலியாக மாறி… வேட்டையில் தன் பங்கு ஆக்‌ஷனை காட்டுவதே கதை.

லிங்குசாமி தனக்கென வைத்துள்ள ஒரு கமர்சியல் படத்துக்கான டெம்ப்ளேட்டான கொஞ்சம் ஆக்‌ஷன் எடுபடும் ஹீரோக்கள், சில நல்ல பாடல்கள், அருமையான ஒளிப்பதிவு, வில்லன் மற்றும் ஹீரோவின் வீரத்தை பறைசாற்றும் ஒரு காட்சி மற்றும் திரைக்கதையில் ஒரு பாட்டு, சில காமெடி காட்சிகள், ஒரு சண்டை மற்றும் முடிந்தால் ஆங்காங்கு செண்டிமெண்ட் என்ற கோர்வையில் காட்சி. இப்படமும் கொஞ்சமும் அதை பிசகாமல் ஒட்டி செல்கிறது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால் மசாலா படத்திற்கு இது ஒரு நல்ல டெம்ப்ளேட். ஆனால் லிங்குசாமி அவர்கள் இயக்கும் படங்களில் பீமாவிலிருந்து இவையனைத்தும் ஒன்று கூடி வர மாட்டேன் என்கிறது. மாதவன் மற்றும் ஆர்யா அட்டகாசமாக அவரின் ஹீரோ வரையறைக்குள் பொருந்த, காமெடி காட்சிகள் பலவும் சிரிக்க வைக்க, சண்டைக்காட்சிகள் ஒரளவுக்கு சுமாராக இருக்க, ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்க… பாடல்களும், மொக்கை வில்லன்களும் படத்தை ரொம்பவே பாதிக்கிறார்கள்.

மாதவன், ஆர்யா இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள். குருவாக மாதவன் . திருவாக ஆர்யா. படம் ஆக்‌ஷன் என்றாலும் நகைச்சுவைக்கு கொஞ்சமும் குறைவில்லை. அதுவும் மாதவன் குருவாக சின்ன விஷயங்களில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். தியேட்டரில் ஒடிவந்து ஒளிந்து கொள்ளும் போதும், சப்-இன்ஸ்பெக்டர் ஆனாதும் மற்றவர்கள் தன்னை பார்த்து பயப்படும் போது பெருமிதப்படுவதும், ஆர்யா செய்த வேலைக்கெல்லாம் தன்னை பாராட்டும் போது நெளியும் போதும், தைரியமாக மாறிய பிறகு ரவுடிகளிடம் பேசும் தோரணையிலும் கலக்குறார். நீண்ட நாள் கழித்து தமிழில் வந்தாலும் மேடி மேஜிக் செய்கிறார்.

திருவாக ஆர்யா துறுதுறுவென இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்டைலிஷாக இருக்க, மாதவனுடனான காட்சிகளில் பாசம் காட்ட, காதல் காட்சிகளில் கவர்கிறார். ஆர்யா பேசும் பஞ்சை விட, மாதவன் அவருக்கு கொடுக்கும் பில்ட்-அப் அட்டகாசம். அதுவும் கிளைமாக்ஸில் வத்திக்குச்சியில் இருக்கும் நெருப்பு அணைய ‘காத்து உன் பக்கம் அடிக்குதுனு’ வில்லன் சொல்ல மாதவன் ‘அடிச்சது காத்து இல்லடா.. புயல்’ என்று சொல்லும் போது அங்கே ஆர்யா நிற்க.. அது பக்கா ஹீரோயிசம்.

சமீரா ரெட்டி,அமலா பால் இருவரும் அக்கா தங்கையாக வந்து அண்ணன், தம்பியை முறையே கரம் பிடிக்கிறார்கள். இருவரும் அறிமுக காட்சியில் போட்டிருந்த மேக்கப்பில் கண்டிபிடிக்கவே கொஞ்சம் நேரம் ஆனதால் ரசிகர்களின் விசில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சமீராவிற்கு ரொம்பவே வயதாகிவிட்டது. அமலா பால் ஆங்காங்க அழகாக இருக்கிறார்.

தம்பி ராமையா அவர்களுக்கு நல்ல ஒரு கதாபாத்திரம். பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நாசர் மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அதகளப்படுத்துகிறார். அதுவும் தப்பை அடிக்க சொல்லிவிட்டு கழுத்தை மட்டும் ஆட்டும் இடத்தில் செம.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் அருமை. அதுவும் மழை சண்டைக்காட்சி அருமையான படமாக்கம். யுவன் ரொம்பவே ஏமாற்றுகிறார். இரண்டே பாடல்கள் தான் கொஞ்சமாவது கேட்கலாம் போல இருக்கிறது. பப்ப பப்ப பாப்பான் மற்றும் தைய தக்கா. மற்றவையெல்லாம் முடியல. மங்காத்தா போல இங்கும் தீம் இசை போல ஒன்றை வைத்து படம் முழுவதும் பின்னனி இசையில் ஒப்பேற்றியிருக்கிறார்.

முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் தேவையற்ற சில காட்சிகளால் ஆர்வம் இழக்க நேரிடுகிறது. படம் முழுவதும் இயல்பாகவே நகைச்சுவையை அமைத்ததற்கு நிச்சயம் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டலாம். ஆனால்  ஏனோ தன்னுடைய முதல் சில படங்களில் வந்தது போல கமர்சியலிலேயே கொஞ்சம் வித்தியாசம் காட்ட மறுக்கிறார். அதே போல் வில்லன்கள் அனைவரும் முகத்தில் மட்டும் டெரர் காட்ட, அவர்கள் கொடுக்கும் ஐடியாக்களிம் போடும் திட்டங்களும் ‘நீங்க டம்மி ரவுடி தானே?’ என்று கேட்கும் ரேஞ்சில் இருக்கிறது. பழக்கூடை குண்டு, அமெரிக்கன் மாப்பிள்ளை காட்சிகள், ஹீரோவிற்கு நெருக்கமானவர்களை கொடுமைப்படுத்துவது போன்ற அதர பழசான காட்சிகள் சில உள்ளன.

லாஜிக்கையெல்லாம் தவறியும் யோசிக்காமல் அமைத்த காட்சிகள் தறிகெட்டு ஒடும் திரைக்கதையினால் மறக்கபட்டு நம்மை படத்துடன் பல இடங்களில் ஒன்ற செய்துவிடுகிறது. ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக பார்க்கலாம்.

வேட்டை – வேங்கையின் முழுமையற்ற  பாய்ச்சல்.

Advertisements
This entry was posted in சினிமா. Bookmark the permalink.

4 Responses to வேட்டை – [2012]

  1. ஹாலிவுட்ரசிகன் சொல்கிறார்:

    நல்ல விரிவான விமர்சனம். மிகவும் நன்றி.

  2. Sivakumar சொல்கிறார்:

    எல்லா கிளாஸ் ரசிகர்களையும் திருப்திப்படுத்த லிங்கு முயன்றாலும் அடிக்கடி தடுமாறி விழுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s