வேட்டை – [2012]

லிங்குசாமியின் இயக்கிய படம் என்றாலே இப்போதெல்லாம் பதற்றத்துடன் தான் தியேட்டர் பக்கம் செல்கிறேன். ‘பீமா’, ‘பையா’ போன்ற படங்களை பார்த்ததன் விளைவது. ஆனால் வேட்டையை பொருத்த வரை படத்தின் டீசர் வெளியான போதே முடிவு செய்துவிட்டேன்… படத்தை பார்க்க வேண்டுமென. ஒரே காரணம் மாதவன் சொல்லும் வசனம் ‘எனக்கே ஷட்டரா?’. ‘ரன்’ படத்தில் மாதவன் ஷட்டரை மூடிவிட்டு கொளுத்தும் சண்டைக்காட்சி இன்றும் ரசிக்கக்கூடிய ஒன்று.

படத்தின் கதை… பயந்த அண்ணன் குருமூர்த்தி, தைரியமான தம்பி திருமூர்த்தி எப்படி தூத்துக்குடி ரவுடிகளை வேட்டையாடுகிறார்கள் என்பதே. அப்பா இறக்க அவருடைய போலீஸ் வேலையை ஏற்குமாறு குருவிடம் திரு சொல்ல பயந்தபடியே ஏற்கிறார். குரு செய்ய வேண்டிய போலீஸ் வேலையை மறைமுகமாக கச்சிதமாய் செய்ய பாராட்டு குவிகிறது குருவுக்கு. பின் ரவுடிகள் இதை கண்டுபிடிக்க… அவர்களிடம் அடிவாங்கி, தைரியசாலியாக மாறி… வேட்டையில் தன் பங்கு ஆக்‌ஷனை காட்டுவதே கதை.

லிங்குசாமி தனக்கென வைத்துள்ள ஒரு கமர்சியல் படத்துக்கான டெம்ப்ளேட்டான கொஞ்சம் ஆக்‌ஷன் எடுபடும் ஹீரோக்கள், சில நல்ல பாடல்கள், அருமையான ஒளிப்பதிவு, வில்லன் மற்றும் ஹீரோவின் வீரத்தை பறைசாற்றும் ஒரு காட்சி மற்றும் திரைக்கதையில் ஒரு பாட்டு, சில காமெடி காட்சிகள், ஒரு சண்டை மற்றும் முடிந்தால் ஆங்காங்கு செண்டிமெண்ட் என்ற கோர்வையில் காட்சி. இப்படமும் கொஞ்சமும் அதை பிசகாமல் ஒட்டி செல்கிறது.

கொஞ்சம் யோசித்து பார்த்தால் மசாலா படத்திற்கு இது ஒரு நல்ல டெம்ப்ளேட். ஆனால் லிங்குசாமி அவர்கள் இயக்கும் படங்களில் பீமாவிலிருந்து இவையனைத்தும் ஒன்று கூடி வர மாட்டேன் என்கிறது. மாதவன் மற்றும் ஆர்யா அட்டகாசமாக அவரின் ஹீரோ வரையறைக்குள் பொருந்த, காமெடி காட்சிகள் பலவும் சிரிக்க வைக்க, சண்டைக்காட்சிகள் ஒரளவுக்கு சுமாராக இருக்க, ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்க… பாடல்களும், மொக்கை வில்லன்களும் படத்தை ரொம்பவே பாதிக்கிறார்கள்.

மாதவன், ஆர்யா இருவருமே எனக்கு பிடித்த நடிகர்கள். குருவாக மாதவன் . திருவாக ஆர்யா. படம் ஆக்‌ஷன் என்றாலும் நகைச்சுவைக்கு கொஞ்சமும் குறைவில்லை. அதுவும் மாதவன் குருவாக சின்ன விஷயங்களில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். தியேட்டரில் ஒடிவந்து ஒளிந்து கொள்ளும் போதும், சப்-இன்ஸ்பெக்டர் ஆனாதும் மற்றவர்கள் தன்னை பார்த்து பயப்படும் போது பெருமிதப்படுவதும், ஆர்யா செய்த வேலைக்கெல்லாம் தன்னை பாராட்டும் போது நெளியும் போதும், தைரியமாக மாறிய பிறகு ரவுடிகளிடம் பேசும் தோரணையிலும் கலக்குறார். நீண்ட நாள் கழித்து தமிழில் வந்தாலும் மேடி மேஜிக் செய்கிறார்.

திருவாக ஆர்யா துறுதுறுவென இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஸ்டைலிஷாக இருக்க, மாதவனுடனான காட்சிகளில் பாசம் காட்ட, காதல் காட்சிகளில் கவர்கிறார். ஆர்யா பேசும் பஞ்சை விட, மாதவன் அவருக்கு கொடுக்கும் பில்ட்-அப் அட்டகாசம். அதுவும் கிளைமாக்ஸில் வத்திக்குச்சியில் இருக்கும் நெருப்பு அணைய ‘காத்து உன் பக்கம் அடிக்குதுனு’ வில்லன் சொல்ல மாதவன் ‘அடிச்சது காத்து இல்லடா.. புயல்’ என்று சொல்லும் போது அங்கே ஆர்யா நிற்க.. அது பக்கா ஹீரோயிசம்.

சமீரா ரெட்டி,அமலா பால் இருவரும் அக்கா தங்கையாக வந்து அண்ணன், தம்பியை முறையே கரம் பிடிக்கிறார்கள். இருவரும் அறிமுக காட்சியில் போட்டிருந்த மேக்கப்பில் கண்டிபிடிக்கவே கொஞ்சம் நேரம் ஆனதால் ரசிகர்களின் விசில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. சமீராவிற்கு ரொம்பவே வயதாகிவிட்டது. அமலா பால் ஆங்காங்க அழகாக இருக்கிறார்.

தம்பி ராமையா அவர்களுக்கு நல்ல ஒரு கதாபாத்திரம். பல இடங்களில் சிரிக்க வைக்கிறார். நாசர் மூன்று காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அதகளப்படுத்துகிறார். அதுவும் தப்பை அடிக்க சொல்லிவிட்டு கழுத்தை மட்டும் ஆட்டும் இடத்தில் செம.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் அனைத்து காட்சிகளும் அருமை. அதுவும் மழை சண்டைக்காட்சி அருமையான படமாக்கம். யுவன் ரொம்பவே ஏமாற்றுகிறார். இரண்டே பாடல்கள் தான் கொஞ்சமாவது கேட்கலாம் போல இருக்கிறது. பப்ப பப்ப பாப்பான் மற்றும் தைய தக்கா. மற்றவையெல்லாம் முடியல. மங்காத்தா போல இங்கும் தீம் இசை போல ஒன்றை வைத்து படம் முழுவதும் பின்னனி இசையில் ஒப்பேற்றியிருக்கிறார்.

முதல் பாதி போவதே தெரியவில்லை. இரண்டாம் பாதியில் தேவையற்ற சில காட்சிகளால் ஆர்வம் இழக்க நேரிடுகிறது. படம் முழுவதும் இயல்பாகவே நகைச்சுவையை அமைத்ததற்கு நிச்சயம் இயக்குனர் லிங்குசாமியை பாராட்டலாம். ஆனால்  ஏனோ தன்னுடைய முதல் சில படங்களில் வந்தது போல கமர்சியலிலேயே கொஞ்சம் வித்தியாசம் காட்ட மறுக்கிறார். அதே போல் வில்லன்கள் அனைவரும் முகத்தில் மட்டும் டெரர் காட்ட, அவர்கள் கொடுக்கும் ஐடியாக்களிம் போடும் திட்டங்களும் ‘நீங்க டம்மி ரவுடி தானே?’ என்று கேட்கும் ரேஞ்சில் இருக்கிறது. பழக்கூடை குண்டு, அமெரிக்கன் மாப்பிள்ளை காட்சிகள், ஹீரோவிற்கு நெருக்கமானவர்களை கொடுமைப்படுத்துவது போன்ற அதர பழசான காட்சிகள் சில உள்ளன.

லாஜிக்கையெல்லாம் தவறியும் யோசிக்காமல் அமைத்த காட்சிகள் தறிகெட்டு ஒடும் திரைக்கதையினால் மறக்கபட்டு நம்மை படத்துடன் பல இடங்களில் ஒன்ற செய்துவிடுகிறது. ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக பார்க்கலாம்.

வேட்டை – வேங்கையின் முழுமையற்ற  பாய்ச்சல்.

Posted in சினிமா | 4 பின்னூட்டங்கள்

பதின்ம வயது

என் தமிழ் வலைதளத்து-ல சினிமா-வ தவிர வேற எதையும் நான் பெருசா எழுதுறதில்லை. அதுக்கு முக்கிய காரணம் அன்றாடம் நடக்கும் விஷயங்களையும், தகவல்களையும் என்னோட ஆங்கில தளத்துலயே எழுதிவிடுவது தான். இங்கயும் எழுத ஆசை தான். ஆனா என்னோட எழுத்த நானே மொழிபெயர்த்த மாதிரி இருக்கும். (மொழிபெயர்க்குற அளவுக்கு அருமையா எழுதுவியா-னு எல்லாம் கேக்க கூடாது 🙂 )இந்த முறை தமிழ் தளத்துல என்னை பத்தி எழுதறதுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சி இருக்கு. அதுக்கு காரணம் குந்தவை அக்கா. அவங்க தான் இந்த தொடர்பதிவு-ல என்னை கோர்த்துவிட்டு இருக்காங்க. நன்றி அக்கா 🙂

__________________________________________________________________

பதின்ம வயது என்பது ஒரு மனிதனோட வாழ்வில் 13 வயதில் இருந்து 20 வயது வரைக்குமாம். பொதுவா இந்த வயசு-ல பசங்க பண்ற சில விஷயங்கள்:
  1. சைட் அடிப்பது, பெண்களை கவர ஏதேனும் செய்வது.
  2. பள்ளி மற்றும் கல்லூரியில் செய்யும் கலாட்டாக்கள்.
  3. விளையாடுவது.
இந்த பதிவுல நான் பள்ளி பருவத்த வச்சி மட்டும் எழுதுறேன்.
இதுல முதல் விஷயத்த எடுத்தோம்-னா நான் வேறும் சைட் அடிச்சதோட சரி. அதுக்கே நான் பாக்குற பொண்ணு நான் இருக்குற பக்கம் திரும்பிட்டா 360 டிகிரி-ல எந்த டிகிரி-ல முகத்த திருப்பிகிட்டா அவளா நான் பார்த்த மாதிரி தெரியாதோ அங்க வைக்கிறது. இதுல பேசுறது-னா… அட போங்க பாஸூ!!! எதாவது ஒரு பொண்ணு பேசகிட்ட வர்ற மாதிரி தெரிஞ்சாலே சும்மா இருக்குற  ஹார்ட் ரெண்டு மடங்கா துடிக்க ஆரம்பிச்சுடும். பேசிட்டா அவ்வளவு தான். பொண்ணுங்க ரொம்ப தெளிவா தான் பேசுவாங்க. நான் தான் எங்க சொல்ல வந்தது மறந்துடுமோ-னு தத்துபித்து-னு உளறிட்டு இருப்பேன். அதனால ‘கவர’ அப்டிங்கிற வார்த்தை என் அகராதி-ல இல்லாமயே போயிடுச்சு.
அடுத்து.. கலாட்டா. இந்த வார்த்தைக்கும் எனக்குமே கொஞ்சம் தூரம் தான். ஒன்பதாவ்து.. பத்தாவது படிக்கிற வரைக்கும் எனக்கு புஸ்தகம், படிப்பு, வாத்தியார், மதிப்பெண் இத தவிர எதுவும் தெரியாது. முதல் பென்ச் வேற. கடைசி பென்சு-ல நடக்குற தில்லாலங்கடி வேலையெல்லாம் மூணாவது பென்ச்லயே காத்துல கரைஞ்சு என்க்கு விஷயம் தெரியாம போயிடும்.

பதின்றாவது படிக்கும் போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுடுச்சு. வத்தியாருங்கள எல்லாம் மரியாதை இல்லாம பேசுறது, பாதி நோட்டு புத்தகத்த வீட்டுல வச்சிட்டு வர்றத-னு ஆறாங்கிளாஸ்ல பண்ணி இருக்க வேண்டிய அலம்பல்களை எல்லாம் பண்ணிட்டு இருந்தேன்.
இதுல ரெண்டு விஷயம் நடந்துது. பதினோறாவதுல இயற்பியல் பாடத்துல முதல் வகுப்பு தேர்வு நடத்துனாங்க. (இயற்பியல் உண்மையிலேயே ரொம்ப கடி போட்ட ஒரு பாடம். x-ஐயும், y-ஐயும் அதுவரைக்கும் கணிதத்துல மட்டும் பாத்துட்டு திடீர்-னு இதுலயும் பாத்த மயக்கம் வராத குறை தான். ஆ-வூ-னா x,y-ஆ கூப்பிட்டுறுவானுங்க.) அதுல கிட்டதிட்ட எல்லாருமே பெயில் தான். நான் கடைசியிலிருந்து ரெண்டாவது மார்க் (8/40). ஆனா பேப்பர என்னோட மார்க் சொல்லி கொடுத்த போது ஏதோ ‘குரு-சிஷ்யன்’ படத்துல நம்ம சூப்பர் ஸ்டார் – ’ஆச்சி’ மனோரமா காமெடிய பாத்த மாதிரி கெக்க-பெக்க சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். வாத்தியார் ரொம்ப கடுப்பாகி மற்றவர்களுக்கு பாடம் புகட்டும்விதமா என்னை வெளிய அணுப்பிட்டார்.
அன்னையிலிருந்து எனக்கும் அவருக்கும் பிரச்சனை தான். தினமும் வகுப்பு ஆரம்பத்துல கேள்வி கேப்பாரு. சில நாள் பதில் தெரியாம வெளிய போயிடுவேன். சில நாள் சொல்லிட்டு, மத்தவங்கள கேள்வி கேக்கும் போது ஜன்னல் வழியா டெலஸ்கோப் இல்லாம வானியல் ஆராய்ச்சி பன்ணிட்டு இருப்பேன். அப்படியே வெளிய போய் தெளிவா ஆராய்ச்சி பண்ணுப்பா-னு அணுப்பிவிட்டுவார். நானும் சளைக்காம பல நாள் இப்படி வெளிநடப்பு செஞ்சிட்டு இருந்தேன். ஒரு சமயம் ஒரு தேர்வுல நான் எடுக்க போற பாதி மார்க் தாள என் நண்பனுக்கு காமிச்சுட்டு இருந்தேன்.(பாதி பாதி கேர்ந்து ஃபுல் ஆயிடும்-ல). இத வெளிய சுத்திட்டு இருந்த வாத்தியார் பாத்து நம்ம இயற்பியல் வாத்தியார் கிட்ட நடந்தத சொன்னாரு. அவரு என்கிட்ட வந்து, ‘எனக்கு தெரியும்டா நீ தான் பாத்து எழுதி இருப்பேனு’ அப்டினு சொல்லிகிட்டு வெளிய உட்கார்ந்துட்டு இருந்த என்னை உள்ள உட்கார வைச்சாரு. நான் ‘தம்பி!!! உனக்கு யாருப்பா வாத்தியார் வேல கொடுத்தாங்க-னு’ நினைச்சிகிட்டே போய் தெரிஞ்ச கதைய விட்ட எடத்துல இருந்து கிறுக்க ஆரம்பிச்சுட்டேன்.

அடுத்து விலங்கியல் ஆய்வகத்துல நடந்த ஒரு விஷயம். அங்க போன போது ஆளுக்கு ஒரு டெஸ்ட் ட்யூப் கொடுத்து சூடு காட்டுங்க, அப்படி பண்ணா தான் ஆராய்ச்சி-னு சொல்லிட்டாங்க. நான் ஆர்வ கோளாறு-ல ஓவரா சூடு காட்டி ட்யூப் காலி. அதுக்கு ஃபைன் கட்டணும்-னு அப்புறம் சொன்னாங்க. முன்னாடியே சொல்லியிருந்தா டெஸ்ட் ட்யூப ஓரமா வச்சிருந்து இருப்பேன். இப்ப வீட்டுல போய் கேட்டா ‘நீ படிக்கிறதுக்கு மட்டும் இல்லாம உடைக்கிறதுக்கு வேற தரணுமா??? ஆமா இதயே நீ ஒழுங்கா செய்ய மாட்டிங்குறியே… நீயெல்லாம் எப்படி படிச்சு வேலைக்கு போக போற-னு’ சம்பந்தம் இல்லாத ஒரு கேள்விக்கு பதில் சொல்லணும். இதுக்கு எப்படியாவது பழிவாங்கணும் சொல்லி பாத்துட்டு இருந்தேன். அப்படி ட்யூப் காலியாதுல இருந்து வந்த காசு-ல எங்க விலங்கியல் டீச்சர் ஆய்வகத்துல இருந்த ஃபிஷ் டேங்க்-க்கு ஃபிஷ் வாங்க சொல்லி என் நண்பன் கிட்ட காசு கொடுத்துட்டாங்க. அவன் என்னைய கூட கூப்பிட்டுகிட்டான். வகுப்பு நேரத்துல ஊர சுத்துறதுனா யாரு வேணானு சொல்ல போறா. நானும் கிளம்பிட்டேன். ‘எல்லாம் அந்த மீன் தொட்டியால தான் -னு’ ரெண்டு பேரும் கருவிக்கிட்டே போனோம். திடீர்-னு ஒரு ஐடியா – ‘அந்த மீன் தொட்டியே இல்லாம போச்சுனா!!!’. அத செயல்படுத்த கொடுத்த காசுக்கெல்லாம் சேத்து ஒரே ஒரு ‘ஃபைட்டர்’ மீன் வாங்கிட்டு போனோம். ஆனா தொட்டியில இருந்த மத்த மீன்களோட அதிர்ஷ்டம்… டீச்சர் ஃபைட்டர தொட்டியில விடுறதுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிட்டாங்க 😦
இன்னும் பல விஷயங்கள் இருக்கு. ஆனா எழுதுற எனக்கே கொட்டாவி வருதுனா, படிக்குற உங்களுக்கு கண்டிப்பா வரும். அதனால மத்த விஷயங்களை வேற பதிவுல பாப்போம் 🙂
Posted in என்ன பத்தி சொல்றேன், தொடர்பதிவு | 6 பின்னூட்டங்கள்

வ – குவார்ட்டர் கட்டிங்

ஹாலிவுட் படங்கள் ‘ஸ்பீட்’, ‘டை ஹார்ட்’ போன்ற படங்கள பாக்கும் போது நமக்கும் தமிழ் சினிமா-ல இந்த மாதிரி ஒரே இரவு இல்ல பகல்ல நடக்குற மாதிரி ஒரு படம் வராதா-னு தோணும். அப்படிபட்ட ஒரு படம் தான் இது. என்ன இது காமெடி வகையறா. ஓர் இரவில் ஒரு குவார்ட்டராவது அடித்துவிட்டு தான் சவுதிக்கு ப்ளைட் ஏற வேண்டும் என்ற கொள்கை கொண்ட ஹீரோவின் காவியமே ‘வ’ குவார்ட்டர் கட்டிங்.

கதை-னு இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமில்ல. ஆனா இத வச்சே ஒரு 135 நிமிடங்கள் நம்மை தியேட்டரில் உட்கார வைக்க பாடுபட்டிருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி. கதைக்களம்-னு பாத்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு. ஒரு இரவு தான் கதை. அதுல முடிஞ்ச வரைக்கும் பொழுதுபோக்குக்காக சில கேரக்டர்கள சேர்த்து கொடுத்து இருக்காங்க. ஆனா அங்க தான் பிரச்சனையே. பல கேரக்டர்கள் இருந்தாலும் சிலவையே நம்மை இரசிக்க வைக்கின்றன.

ஹீரோ மிர்ச்சி ‘சிவா’. கலக்கி இருக்காரு. எஸ்.பி.பி.சரண் கிட்ட அவர் கட்டிங் எப்படி சாப்டுறோம்-னு சொல்ற இடம் செம காமெடி. அவருக்கு மச்சினனாக எஸ்.பி.பி.சரண். பல இடங்கள்-ல இவங்களோட ஒன் – லைனர்கள் ரசிக்க வைக்குது. லேகா வாஷிங்கடன் மக்கு மாணவியா வர்றங்க. +2 மாணவி-னு இவங்கள பாத்தா நம்ப முடியுது!!!

ஜான் விஜய். படத்தோட வில்லன். இரட்டை வேடம். இரண்டுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி அவர் செய்திருந்தாலும் எனக்கு பிடிக்கவில்லை. இந்த மாதிரி படங்களை நான் பார்ப்பது புதிது என்பதால் இருக்கலாம். மற்ற அனைவரும் முடிந்தவரை சீரியஸாக இருந்து நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

டெக்னிக்கலா படம் டாப். நீரவ் ஷா த்ன்னுடைய வழக்கமான் அசத்தலான ஒளிப்பதிவ கொடுத்து இருக்கார். படத்தோட மூட செட் பண்ணதுல அவரோட பங்கு அதிகம். அதே மாதிரி படம் லைட்டிங்கும் அட்டகாசம். எடிட்ங் – ஆண்டனி. சில காட்சி கத்தரிப்புகள் எல்லாம் அனயாசம். ஆனாலும் முதல் பாதியை இவரால் துரிதபடுத்த முடியவில்லை.

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள்-ல சவுதி சேக் பாடல் ஒ.கே. இரண்டவது பாதி-ல மெலடி ஒண்ணு வந்துது. அது நல்லா இருக்கு-னு என் நண்பர்கள் சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிக்கல. பின்னனி இசை பல இடங்கள்-ல நல்லா இருந்துது. சில இடங்கள்-ல தலைவலி.

முதல் பாதி ஆரம்ப 30 நிமிடங்கத்திற்கு பிறகு இழுவையாய் செல்ல, இரண்டாம் பாதி கொஞ்சம் வேகமாகவே செல்கிறது. திரைக்கதையில் மேலும் சில சுவாரஸ்யங்களை சேர்த்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படம் கோர்வையாக இல்லாமல் சில, சில காட்சிகளாய் மட்டுமே நன்றாக உள்ளது. ஆனாலும் புஷ்கர்-காயத்ரி அவர்களின் இந்த முயற்சி வரவேற்கதக்கதே.

‘வ’ குவார்ட்டர் கட்டிங் – சில கட்டிங்-ல மப்பு ஏறல.

Posted in சினிமா | 4 பின்னூட்டங்கள்

சிங்கம் – விமர்சனம்

கடத்தல், கட்ட பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயல்களை செய்பவர்களை கம்பீரமாக வேட்டையாடி வீழ்த்துபவனே ‘சிங்கம்’.

தூத்துக்குடி நல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ ஆக துரைசிங்கம். அதுவே அவரது சொந்த ஊரும் கூட. அனைத்து விஷயங்களையுமே தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். சென்னையில் கட்ட பஞ்சாயத்து செய்பவராக பிரகாஷ்ராஜ். இவரும் சிம்மசொப்பனமாக திகழ்கிறார். இவரும் துரைசிங்கமும் ஏன், எப்படி சந்தித்து கொள்கிறார்கள் மற்றும் அதன் பின் இருவருக்கும் நடக்கும் சண்டையும் தான் கதை.

சூர்யா… மறுபடியும் காக்க காக்க படத்திற்கு பிறகு போலீஸ் வேடத்தில்… கம்பீரமாக இருக்கிறார். போலீஸ் கதாப்பாத்திரம் இவருக்கு நன்றாகவே சூட் ஆகிறது. ஆங்காங்கே வரும் காதல் காட்சிகளில் அட்டகாசமாக செய்திருக்கும் இவர், பஞ்ச் வசனம் பேசும் போது தான் கத்தி காதை கிழிக்கிறார். ஆனால் அதுவும் சில இடங்களில் நன்றாக்வே இருக்கிறது. குறிப்பாக பிரகாஷ்ராஜின் இடத்திற்கு சென்று ‘தனியா வந்து நிப்பேன் -னு நினைக்கிலல, தட்டி தூக்குவேன் -னு…..’ வசனம் பேசும் போது மாஸ். அனுஷ்கா காதலை சொன்னவுடன் கண்ணாடி பார்த்து சிரிக்கும் போது வரும் புன்னகை அப்படியே ‘மெளனம் பேசியதே’ சூர்யாவை நினைவுப்படுத்துகிறது.மாஸ் ஹீரோவாக இந்த படத்தின் மூலம் நன்றாகவே ஊன்றிவிட்டார்.

அனுஷ்கா… இவருக்கும் கொஞ்சம் ஸ்கோப் கொடுத்து இருக்கிறார்கள். நன்றாகவே செய்து இருக்கிறார்… வசன காட்சிகளின் போது காமெடியிலும், பாடல் காட்சிகளில் கவர்ச்சியிலும்.

வில்லனாக பிரகாஷ்ராஜ். கலக்கி எடுக்கிறார். பேச வேண்டிய இடங்களில் பேசி டெரர் காண்பிக்கிறார். படம் தொய்வில்லாமல் செல்வதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.

விவேக்…. படிக்காதவனுக்கு அப்புறம் இப்ப தான் கொஞ்சமேனும் சிரிக்க வைத்து இருக்கிறார். அனுஷ்காவிடம் காசு வாங்கி கொண்டு போன் நம்பர் தரும் இடத்திலும், கடத்தல் லாரியை பிடிக்க வரும் இடத்திலும் இவர் காமெடியை ரசிக்க முடிகிறது. இவரது இந்த இரட்டை அர்த்த வசனங்களை நிறுத்தி கொண்டால் நல்லது என தோன்றுகிறது.

ராதா ரவி, நாசர், ‘நிழல்கள்’ ரவி, விஜயக்குமார்-னு ஒரு பெரிய ஜாம்பவான்கள் கூட்டமே நடிச்சு இருந்தாலும் யாருக்கும் பெரிய ஸ்கோப் இல்ல. ஆனா பண்ண வேண்டிய கேரக்டர்கள நல்லா பண்ணியிருக்காங்க.

ஒளிப்பதிவு – ப்ரியன். ஆக்‌ஷன் காட்சிகள நல்லா படம் புடிச்சு இருக்கார். பாடல் காட்சிகள் எல்லாம் கலர்ஃபுல்.

எடிட்டிங் – வி.டி.விஜயன். அபாரமாக செய்திருக்கிறார். படத்தை தட தட-வென ஒட வைக்கிறார்.

இசை – தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் சுமாராக இருந்தாலும் எழுந்து ஒடிவிடும்படி இல்லை. ‘என் இதயம்’ எங்கோ கேட்டது போல் இருக்கிறது. ‘Stole my heart’ பாடல் நமது இதயங்களை கொள்ளையடிக்கிறது. பின்னனி இசை பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.ஒகே.

டைரக்‌ஷன் – ஹரி. சூர்யா எஸ்.ஐ பதவியிலிருந்து, ஏ.சி யாக சில காட்சிகளில் முன்னேறுகிறார். அதே வேகத்தில் படம். முதல் பாதி போவதே தெரியவில்லை. ஜிவ்வென்று சென்று இண்டெர்வெல் கார்டு போடும் போது தான் 1.15 மணிநேரம் போனது தெரிகிறது. இரண்டாவது பாதியில் மசாலா படங்களுக்கே உரிய பிரச்சனையான நீண்ட மற்றும் வசனங்களால் ஆன கிளைமாக்ஸ் படத்தின் வேகத்தை பாதிக்கிறது. தூத்துக்குடியில் பிரகாஷ்ராஜ் பிரச்சனை பண்ணும் போது ஊரே திரண்டு வந்து சூர்யாயுக்கு சப்போர்ட் செய்வது, எக்ஸ்பயர் ஆனா பாஸ்போர்ட்டை வைத்து ஒரு நல்ல காமெடி, காதல் காட்சிகள், வேலையை விட்டு சூர்யா செல்லலாம் என நினைக்கும் போது அனுஷ்காவின் வசனம் என பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

படத்தின் சில குறைகள்…. ஹீரோ அதிபுத்திசாலியாக இருப்பது,  வில்லன்கள் கொடுத்த காசை விட அதிகமாக பறப்பது, 20-30 பேர் வில்லனுக்கு பின் வருவது, 10-15 சூமோக்கள் வில்லனின் காருக்கு முன்பும், பின்பும் என மசாலா படங்களின் ஸ்டீரியோ டைப் காட்சிகள் அப்படியே ஃபாலோ பண்ணி இருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா வில்லன்களை எகிறி அடிக்கும் போது சிங்க முகத்தை கிராபிக்ஸ் பண்ண ஐடியா கொடுத்தவர் ஒழிக.

சில திருப்பங்களை எளிதாக கணிக்க முடிந்தாலும், லாஜிக் உதைத்தாலும் பார்க்கும் போது பெரிய குறை ஏதும் தெரியவில்லை. தன்னை மீண்டும் அற்புதமான ஒரு கமர்ஷியல் டைரக்டராக ஹரி நிருபித்துவிட்டார்.

சூர்யாவின் இந்த 25-வது படம் அவரது சில இரசிகர்களை திருப்திபடுத்தாவிட்டாலும், அவருக்கு மேலும் சில ரசிகர்களை உருவாக்கும்.

சிங்கம் – வெற்றி கர்ஜனை.

பி.கு: சன் டி.வி ட்ரைலரை பார்த்து யாரும் பயந்து விட வேண்டாம் 😉 படம் நன்றாகவே இருக்கிறது 🙂

Posted in சினிமா | 11 பின்னூட்டங்கள்

சுறா – ஒரு யதார்த்த ’தமிழ்’ சினிமா????

தமிழ் சினிமாவிற்கென சில மரபுகள் உண்டு. அதை எந்த விதத்திலும் உடைக்காமல் எடுக்கப்பட்டுள்ள திரைக்காவியமே ‘சுறா’. எப்படி??

ஊரே போற்றும், அவர்களுக்காகவே போராடும், பக்கம் பக்கமாக வசனம்(அறிவுரை, சவால், பஞ்ச் டயலாக் என படிக்கவும்) பேசி கொண்டும், இவர் பேசாமல் விட்டதையும் மற்றவர்களை சொல்ல வைத்து, எத்தனை அடி வாங்கினாலும் எழுந்து நின்று, எததனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யும் ஹீரோவாக விஜய்.

லூசா, அரைலூசா என்று பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு ஒரு  கேரக்டராக, துணியை விற்று தன்னுடைய கார் வாங்கிய தாராள மனசுடையவராக, ஹீரோவை பார்த்தவுடன் காதல் கொள்பவராக, பாடலில் குத்தாட்டம் போடுபவராக ஹீரோயின் தமன்னா.

நாயகியின் லூசு பட்டத்திற்கு போட்டியாகவும்,  ஹீரோவிடம் மட்டுமல்லாமல் மற்ற அனைவரிடமும் அடிவாங்க காமெடியன் வடிவேலு. இவரின் இந்த பட காமெடி பார்த்து ‘இதுக்கு மேல வேணாம், அழுதுருவேன்’ என்று இரசிகர்கள் அவரது டயலாக்கையே அடிக்கிறார்கள்.

யார் யாரையோ அசால்ட்டாக போட்டு தள்ளி டயலாக் பேசுபவராக, ஆனால் நாயகனிடம் வசனம் மட்டும் பேசி அவனை கொல்லாமல் விடுவதற்கு லாஜிக் சொல்வராக, அமைச்சராக், மிக மோசமானவராக வில்லன்.

ஹீரோவின் புகழ் பாடும் எதிர்கோஷ்டி எடுபிடியாக இளவரசு. மற்ற அனைவரும் பாடுவார்கள். இவர் கொஞ்சம் ஸ்பெஷல்.

டைரக்டரின் ’டச்’கள்:

பாம் இருக்கும் இடத்திலேயே வில்லனின் மனைவியையும், குழந்தைகளையும் வைத்தது,

விஜய் அந்த பார்வையற்றவரிடம் பேனா வாங்கியவுடனே தமன்னாவிற்க்கு காதல் வர வைத்தது,

விஜய் ஊர் திருவிழாவில் ஆடும் போது தமன்னா அவரின் அம்மாவுடன் நிற்க, பாடலுக்கு நடுவே அவர்களை க்ளோசப்பில் காட்டுவது,

ஹீரோவுக்கு பின் சூறாவளியையும், சுனாமியையும் காட்டுவது,

ஹீரோவை அடிக்க வரும் கும்பல் அவரின் அம்மாவின் மண்டையை உடைப்பது…

விஜய் எல்லோராலும் இறந்துவிட்டார் என  நம்பபட்ட பிறகு, சடாரென்று எழுந்து வருவது…

ஜட்ஜ்க்கே மிமிக்ரி செய்து காட்டி சட்டம் சொல்லி கொடுப்பது…. ஆவ்வ்வ்வ்..

….இப்பவே கண்ண கட்டுதே…..

சுறா – எர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றா… (இத வச்சி வேற ஏதோ ஒரு ‘பஞ்ச்’ வந்துது).

Posted in சினிமா | 8 பின்னூட்டங்கள்